மும்பை

காராஷ்டிர சட்டப்பேரவையின் கொறடா அஜித் பவாரா அல்லது ஜெயந்த் பாடிலா என அடுத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது   அத்துடன் இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.   இந்த உத்தரவின்படி ஒவ்வொரு கட்சிக் கொறடா சொற்படி மட்டுமே உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.

இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடா யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித் பவார் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போது அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக  பதவி ஏற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அஜித் பவார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக ஜெயந்த் பாடில் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் கொறடாவாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராவ்சாகிப் தான்வே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் சட்டப்பேரவை அதிகாரிகள் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அனுப்பியுள்ள கடிதத்தின்படி கட்சியின் கொறடாவாக ஜெயந்த் பாடில் செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.  ஆனால்  ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளதால் அதை சபாநாயகர் மட்டுமே மாற்ற முடியும் எனவும் தற்போது சபாநாயகர் நியமனம் செய்யப்படாததால் அஜித் பவார் கொறடாவாக நீடிக்கிறார் எனவும் பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் சட்டப்பேரவை தலைமைச் செயலர் அனந்த் கால்சே, “ஒரு கட்சியின் கொறடா என்பவர் அக்கட்சியின் சார்பில் நியமிக்கப்படுபவர் ஆவார்.  தற்போது அஜித் பவார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.   எனவே கட்சியின் உறுப்பினராக இல்லாதவர் அக்கட்சிக்குக் கொறடாவாக இருக்க முடியாது.  எனவே ஜெயந்த் பாடில் அக்கட்சியின் கொறடா என்பதே சரியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கர்கள், “இதன் மூலம் நம்பிக்கை தீர்மானத்தின் முடிவு எப்படி இருந்தாலும் அதை இரு தரப்பினரும் எதிர்க்க முடியும் என்னும் நிலை உண்டாகி இருக்கிறது.   அத்துடன் கொறடா யார் என்னும் குழப்பத்தினால் அணி மாறி வாக்களிப்பவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.