சென்னை: தமிழகத்தில் பத்திர பதிவில் புதிய மாற்றங்களை தமிழக அரசு அமல்படுத்திஉள்ளது. நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பையும் அதிரடியாக உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில், நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது போல, கட்டிடங்களுக்கும் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டு மானங்களுக்கு 20 சதவீதமும், கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதி களுக்கு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவின்போது .வீடுகள், தொழிற் சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது, நிலத்தின் மதிப்புடன், கட்டடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த கட்டடங்களை, எப்படி மதிப்பிட வேண் டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வரையறை செய்து வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டி மதிப்புகளை கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுமான பரிவு முதன்மை தலைமைபொறியாளர் ராஜாமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, கட்டிடங்களுக்கு இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
காங்கிரீட் கட்டிடம்
சென்னையில் கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தரைதளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325 என்றும் இரண் டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,215 என்றும் முதல் தளத்துக்கு ரூ.7,470 என்றும், 2ம் தளத்திற்கு ரூ.7,830 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட மதிப்பினை கொண்டு இனி வருஙகாலங்களில் முத்திரை தீர்வை வசூலிக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
மாநகாட்சி பகுதியில் கடும் உயர்வு
கோவை, மதுரை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 சதவீதம் கொடைக்கானல், நீலகிரி ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் 15 சதவீதமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.