கோழிக்கோடு: கேரளாவில் புதிய வகை பாக்டீரியா தொற்றால் 11 வயது சிறுவன் பலியானதுடன் 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் ஷிஜில்லா (shigella) என்ற பாக்டீரியா வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். பாக்டீரியா குடும்பத்தின் ஒரு வகையை சேர்ந்த இந்த ஷிஜில்லா, குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தி, டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போன்று 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் பலர் சிகிச்சைக்கு பின்னர் குணம் பெற்றுவிட்டனர். 6 பேருக்கு ஷிஜில்லா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோழிக்கோட்டின் கொட்டபரம்பு வார்டு பகுதியில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த பகுதியிலுள்ள கிணறுகளில் குளோரின் கலந்து சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். கேரளாவில் அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பாக்டீரியா தொற்றும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.