தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை:

மிழகத்திற்கு மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதில் தெரிவித்தார்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்றைய கூட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்திருந்தனர்.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் தொடங்கி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அப்போது உறுப்பினர்கள் கோடை காலத்தை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,

மின்வாரிய ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதால், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதால், பற்றாக்குறை ஏதுமில்லை, நிலக்கரியை கையிருப்பு வைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது கோடைக்காலம் முடிவடைந்துள்ளதாலும், காற்றாலை மூலமும் மின்சாரம்  உற்பத்தி அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.