சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் இனிமேல் பாதிப்பு வராது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது.

பொதுவாக, மழைநீர் வடிகால்கள் 7 மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் உள்ள சாலைகளில் அமைக்கப்படுகின்றன. வடிகாலின் குறைந்த பட்ச அளவு 600×700 மி.மீ ஆகும். வடிகாலின் அளவு நீர்பிடிப்புப்பகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு ஆகியவைகளைப் பொறுத்து வடிவமைக்கப்படும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில், சாலையின் அகலம் எவ்வாறு இருந்தாலும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள் வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக, வடிகால்பணிகளை காண்டிராக்ட் எடுக்கும் காண்டிராக்டர்கள், அதை ஒழுங்காக கட்டுவது இல்லை. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து, அவர்கள் கேட்ட இடத்தில் கையெழுத்தை போட்டு வருகிறார்கள். இதனால், சென்னை நகர் சாதாணை மழைக்கே தண்ணீர் தேங்கி குளம்போல காட்சிஅளிக்கும் நிலை உருவாகிறது.

இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு பதவி ஏற்றதும் மேற்கொண்டு வருகிறது. இதற்பாக பல ஆயிரம் கோடி பணம் செலவழிக்கப்பட்டும் இன்னும் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை. ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிடும் என்று கூறிய ஆட்சியாளர்கள், மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் பணிகளை முழுமையாக முடிக்காமல் உள்ளனர். இதனால், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.  அதனால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மழைநீர் காவல்வாய்களில் துர்வாரும் பணிகளும்,  நடப்பாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோழிங்கநல்லூர்: ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேற்று  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெருங்குடி சர்ச் சாலையில் இந்த பணியின் தொடக்க விழா நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் வரவேற்றார். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அப்போது, சென்னையில்,  தற்போது பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி  இருக்கிறோம் என்றவர்,  சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம். தற்போது சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நீலாங்கரை மதியழகன், பாலவாக்கம் சோமு, சென்னை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பாலவாக்கம் விசுவநாதன் ஜே.கே.மணிகண்டன், 184-வது வட்ட செயலாளர் ஆர்.தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.