அமெரிக்கா வரை செல்லும் ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகள்..!
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கை முறுக்குகள் குறித்த ஈசன்எழில்விழியன் அவர்களின் முகநூல் பதிவு
சேலம் மாவட்டம், அரியானூர் டூ திருச்செங்கோடு சாலையிலுள்ள ஆட்டையாம்பட்டி, மருளையம்பாளையம் இரண்டு ஊர்களும் ருசியான மொறு மொறு கைமுறுக்குக்கு பேர் பெற்ற ஊர்கள்..!
இந்த இரண்டு ஊர்களிலும் பரம்பரை பரம்பரையாகப் பல குடும்பங்கள் பாரம்பரியம் மணக்கும் கைமுறுக்கு சுட்டு தினசரி விற்பனை செய்து வருகின்றன….! சுற்றுவட்டார மக்கள் மற்றும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் இங்கு தேடி வந்து சுடச்சுட கைமுறுக்கு வாங்கி செல்கின்றனர்..!
கார்அரிசி மாவு கிரைண்டரில் ஆட்டப்பட்டு அதனுடன் பொட்டுக்கடலை மாவு,எள்ளு ,சீரகம் சேர்த்து முறுக்கு மாவு பிசையப்படுகிறது..
பின்பு பல அளவுகளில் முறுக்கு கையினால் பின்னப்படுகிறது…! இப்பகுதி பெண்கள், மாணவிகள் பகுதி நேரமாக முறுக்கு பின்னி பணம் சம்பாதிக்கின்றனர்…!
ஒரு சாக்கு பரப்பளவு முறுக்கு பின்னக் கூலி ரூ10, அதை எண்ணெய்யில் போட்டு முறுக்கு சுட்டு எடுக்க கூலி ரூ5 தரப்படுகிறது…! விறகு அடுப்பில் முறுக்கு சுடப்படுவதால் அதற்குத் தனிச்சுவை கிடைக்கிறது…!
1ரு.,2ரூ,5ரூ,10ரூ விலைகளில் அதற்கேற்ற அளவுகளில் முறுக்குகள் சுடப்பட்டு உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றன..! முறுக்கு மாவுடன் நிலக்கடலை சேர்த்து தட்டி, தட்டுவடையும் சுட்டு விற்பனை செய்யப்படுகிறது…
ஆட்டையாம்பட்டி அடுத்து மருளையம்பாளையம் ஊர் ஆரம்பத்தில் முனியப்பன் கோவில் அருகிலுள்ள ராசமாணிக்கம் முறுக்கு கடை ( 90433 47913) வாடிக்கையாளர்கள் நன்மதிப்பைப் பெற்ற ஒரு முறுக்கு கடையாகும்…
இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் சூடான ஆட்டையாம்பட்டி முறுக்குகள் மொறு மொறுவென சூப்பர் ருசியாக இருக்கின்றன…!
இங்கிருந்து ஆட்டையாம்பட்டி முறுக்குகளை, அமெரிக்காவிலுள்ள தங்கள் உறவினர்களுக்கு மக்கள் அனுப்பவதாக ராசமாணிக்கம் மிக பெருமையாகக் கூறினார்…!
மேலும் காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேர் திருவிழா நேரத்தில் ஆட்டையாம்பட்டி முறுக்கு விற்பனை படுஜோராக இருக்கும் என்றும் தெரிவித்தார்…!
ஆட்டையாம்பட்டி முறுக்குகளை10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்…!
குழந்தைகளுக்குக் கொடுக்க சுவையான நம்மூர் தின்பண்டம் ஆட்டையாம்பட்டி முறுக்கு ஆகும்….!
உடலுக்குத் தீங்கில்லாத, எந்த இரசாயன கலப்பும் இல்லாத ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகளை கிராமிய பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் உள்ளூர் உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இனி அடிக்கடி நாமும் வாங்குவோம்…! உறவினர்கள் நண்பர்களுக்கும் வாங்கி தருவோம்…! நன்றி…!
வாழ்க வளர்க ஆட்டையாம்பட்டி கைமுறுக்குத் தொழில்!