கட்டாக்கில் உதித்த அட்டாக்!
* “வந்தேறி
கும்பினியரின்
வாலறுக்க
வாள்வீச்சும்,
வாய்வீச்சும்
போதாதென்ற
வங்கத்துச் சிங்கம்
வந்துதித்த நாள் –
ஜனவரி 23!
* ரத்தம்
கொடுங்கள்
சுதந்திரம்
தருகிறேன்
என்றது
சுபாஷின்
சுத்த வீரம்!
* ஆம்
‘கட்டாக்’கில் பிறந்த
காளைக்கு
ஆர்வமெல்லாம்
‘அட்டாக்’கில்
அதனால்தான்
போராடி
பெறுவதே
விடுதலை
என்றது
போஸின்
போர்க்குணம்!
* சித்தரஞ்சன்தாஸின்
சீரிய
தொண்டனான
நேதாஜி
காந்தியின்
அகிம்சை
முடிவுக்கெதிராக
கச்சை கட்டினார்!
அதனால்
காங்கிரசார்
அவரை
கட்டம் கட்டினார்!
* அகில இந்திய
தலைமைக்கு
காந்தி களமிறக்கிய
சீத்தாராமையாவை
நேதாஜி நேர்நின்று
வென்றும்
காட்டினார்!
* ஆனால்
மகாத்மாவோ
தனக்கே
தோல்வியென
அறிவிக்க…
வென்றிட்ட
நேதாஜியோ
தலைவர் பதவியை
தூக்கி வீசி
விரக்தியோடு
நடையைக்
கட்டினார்!
* பார்வர்டு பிளாக்
பிறந்தது!
பாரதம் மீட்க –
போர் முழக்கம்
எழுந்தது!
* இரண்டாம்
உலகப் போரில்
பாரெங்கும்
பரவிக் கிடந்த
பாரதத்தின்
போர்க் கைதிகளை
திரட்டி
இந்திய தேசிய
ராணுவத்தை
கட்டி எழுப்பினார்…
பிரித்தாளும்
பிரிட்டனது
எதிரிகளை
ஒன்று திரட்டினார்
* கொடுங்கோலன்
ஹிட்லரோடும்,
மூர்க்கன்
முசோலினியோடும்
வெள்ளையரை
வீழ்த்த
வியூகம்
கட்டினார்…
பர்மாவில்
இருந்தபடி
பாரதத்தின்
விடுதலைக்கு
பாதை
கூட்டினார்!
* சிங்கப்பூர்
மாநாட்டில்
சீறி ஒலித்தது
சுபாஷின்
சுதந்திரப்
பிரகடனம்!
* ஆனாலும் –
கும்பினியர்
சூழ்ச்சியில்
இந்திய தேசிய
ராணுவம்
இக்கட்டில்
சிக்கியது!
ஜப்பான்
சரணடைய…
“தற்காலிக
தோல்விக்கு
மனச்சோர்வு
வேண்டாம்
நம்பிக்கை
கொள்வீர்” என
வங்கத்துச்
சிங்கத்தின்பேரில்
வந்தது
இறுதி அறிக்கை!
* அதன்பின் –
வானூர்தி
விபத்தில்
மறைந்தார்
நேதாஜி
என்றே
வந்ததோர்
இரங்கல்
அறிக்கை!
* அன்றுமுதல்
இன்றுவரை
நேதாஜி
மரணத்தில்
நிச்சயமற்ற
குழப்பங்கள்!
* இன்னும்கூட
இருப்பதாக
எத்தனையோ
செய்திப்
புழக்கங்கள்!
* ஆம்!
மங்காத மாவீரனுக்கு
வந்தநாள்தான்
உண்டு!
சென்ற நாள்
இல்லையே!
கவிதை: சித்ரகுப்தன்