காத்மண்டு: சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பான மசோதா, நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையிலும் முழுமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி இந்த மசோதாவை நேபாள நாடாளுமன்றத்தின் கீழவை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நடவடிக்கையை, செயற்கையான விரிவாக்க முயற்சி என்றும், வரலாற்று ஆதாரமோ அல்லது நிரூபணமோ இல்லாத செயல்பாடு என்றும் இந்தியா சார்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் லிபுலேக் மலை கணவாய், கலபானி மற்றம் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமானவையாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வரைபடத்தை அங்கீகரிப்பதுதான் இந்த வாக்கெடுப்பு.

இப்பகுதிகளில், நேபாளத்தின் எதிர்ப்பையும் மீறி, இந்தியா சார்பில் சாலை அமைக்கப்படுவதாக அந்நாடு குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில், ஒரு ஓட்டுகூட எதிராக விழாமல், 57 உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம், “இந்திய – நேபாள உறவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அது சாதாரண உறவே அல்ல” என்று கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.