காத்மண்டு
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் இமயமலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் முந்தைய கணக்கின் படி 8,848 மீட்டர்கள் ஆகும். கடந்த 2015 ஆம் வருடம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நில நடுக்கத்தின் பாதிப்பு எவரெஸ்ட் சிகரத்திலும் இருந்தது. எனவே இந்த சிகரத்தின் உயரத்தில் மாறுதல் இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
எனவே இந்த சிகரம் அமைந்துள்ள நாடான நேபாளம் மீண்டும் உயரத்தை அளக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை அமர்த்தியது. இதற்குச் சீனாவும் உதவியது. இது குறித்து 2019 ஆம் வருடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் சென்ற போது ஒரு ஒப்பந்தம் இடப்பட்டு சிகரத்தின் உயரத்தை அளக்கும் பணி தொடங்கியது.
தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் திருத்தப்பட்ட உயரத்தை நாளைக்கு அதாவது செவ்வாய்க்கிழமை அன்று மாலை அறிவிக்க உள்ளதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி அனைத்து ஊடகங்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், உள்ளிட்டோருக்கு அரசின் நில அளவுத் துறை துணை இயக்குநர் அழைப்பு அனுப்பி உள்ளார்.