காத்மண்டு: நேபாள நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
அந்நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் கடந்த 14ம் தேதி நிலச்சரிவு ஏற்பட 37 வீடுகள் இடிந்து விழுந்தன.
தகவல் அறிந்தவுடன் ராணுவம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி பலியான 11 பேரின் உடல்கள் வெள்ளியன்று மீட்கப்பட்டன. 7 பேரது உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
ஆகையால் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 21 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.