சென்னை: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்ய கட்டண விலக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது அலகு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அது தொடர்பாக ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரேபிய நாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனங்களான, கோப்ரா இன்ஸ்டாலேசியன்ஸ் மற்றும் டெக்டான் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்ய 26.80 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து அப்போது எடப்பாடி தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீது, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று விசாரித்தது. அதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.