சென்னை: தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் வரும் 24ந்தேதி (செப்டம்பர் 24, 2023) முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வுகள் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் நெல்லையில் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய ரயில்வே துறை, நாடு முழுவதும் வந்தேபாரத் என்ற பெயரில் அதிகவேக ரயில்களை இயக்கி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த ரயில் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கான என்ஜின்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில், அதிவேக புல்லட் ரயில் போல இயங்கும் வசதி கொண்டது. முழுவதும் குளிரூட்டப்பட்ட நிலையில், ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.
நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில், சென்னை கோவை, சென்னை மைசூரை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, நெல்லை சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்குவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்தன. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளத்தை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்டு 15ந்தேதி தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தண்டவாளப் பணிகள் காரணமாக, ரயில் இயக்குவது தாமதமானது.
இந்த நிலையில், வரும் 24ந்தேதி நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று நெல்லையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் ஆய்வு குழுவினர் நெல்லை ரயில் நிலையம் உள்பட பல பகுதிகளில் இறுதி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் நெல்லை சென்னை இடையே பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால், தமிழ்நாட்டில் இயக்கப்படும் 3ஆவது ரயிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.