சேலம்:

நெல்லைக்கண்ணனுக்கு நெல்லை நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து இன்று அதிகாலை யிலேயே  அவர் சிறையில் இருந்து ரகசியமாக  விடுதலையானார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெலைக்கண்ணன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  இந்த நிலையில் அவர் தரப்பில் ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை அவரது வழக்கறிஞர்கள் இரவோடு இரவாக சேலம் ஜெயிலுக்கு கொண்டுசென்றனர். அங்கு நீதிமன்றத்தின் உத்தரவு  முறைப்படி பரிசீலிக்கப்பட்டு, இன்று அதிகாலையிலேயே சிறையில் இருந்து வெளியே வந்தார்.

பொதுவாக காலை 7 மணிக்கு மேலேயே ஜாமின் பெற்றவர்கள்  சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில், நெல்லைக் கண்ணன் அதிகாலையிலேயே சிறையில் இருந்து வெளியேறினார்.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர், நெல்லைக்கண்ணன் சிறையில் இருந்து வெளியே வருவதை எதிர்த்து யாராவது ஆர்ப்பாட்டம் ஏதும் நடத்தலாம் என்று கருதியே, அதுபோன்ற வேண்டத்தகாத சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அதிகாலையிலேயே ரகசியமாக விடுதலை செய்யப்பட்டார் என்று தெரிவித்து உள்ளனர்.