நெல்லை:

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணனுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  நெல்லையில்  எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த பேச்சாளரும், தமிழ் இலக்கியவாதியும் நெல்லை கண்ணன்  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இது தொடர்பாக பாஜக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது ஐபிசி 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), ஐபிசி 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), ஐபிசி 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவு உள்பட 5 பிரிவுகளில் அவர் மீது போலீஸ் வழக்குப்பதிந்து, பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்  கைது செய்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு   கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தது.

இந்த நிலையில், நெல்லை கண்ணன் சார்பில் நெல்லை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நெல்லை கண்ணன் சார்பில்  ஆஜரான வழக்கறிஞரின் நெல்லை கண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்று நெல்லைக்கண்ணனுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக நெல்லை கண்ணன் நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.