மதுரை:  தடை மீறி போராட்டத்தில் ‘நீதி கேட்பு பேரணி’யில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை டூ சென்னை  ‘நீதி கேட்பு பேரணி’ அறிவிக்கப்பட்டது. இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த  குஷ்பு உள்பட மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையிலிருந்து சென்னை நோக்கி பாஜக பேரணி மேற்கொண்டுள்ளனர். பாஜக மகளிரணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , பல மகளிர் அணி தலைவர்கள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியேறாதவாறு காவல்துறையினர் அவர்களின் வீடுகள் முன்பு காவலுக்கு உள்ளனர்.  மேலும் பேரணி நடைபெறும் பகுதியில் காலை முதலே நூற்றுக்கணக்கான மகளிர் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் ஜனவரி 3 -ஆம் தேதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பாஜக காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்ட படி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதையடுது, பேரணி தொடங்க உள்ள இடத்தில் காலை முதலே பல பகுதிகளில் இருந்து பெண்கள் வரத்தொடங்கினர். அப்போது பல இடங்களில் காவல்துறையினர் மகளிர் அணியினரை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்ல வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, பல பாஜக மகளிர்அணி நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ள அவலமும் அரங்கேறி உள்ளது.

இருந்தாலும், இன்று காலை திட்டமிட்டபடி,   மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் தடையை மீறி பெண் தொண்டர்கள் நீதிகேட்டு பேரணி நடத்த குவிந்தனர். பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார். இந்த பேரணியை தொடங்கி வைத்து பேசிய  குஷ்பு, ”இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.

திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு எங்குமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும். எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

நீதி கேட்பு பேரணியில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமா ரதி ராஜன் உள்பட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.  அவர்கள் பேரணியில்  செல்ல முயன்றதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர்  காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த பேரணி தொடங்குவதற்கு முன்பு,   பாஜக பெண் தொண்டர்கள்  அந்த பகுதியில் உள்ள அம்மனுக்கு மிளகாய் சாற்றுவதற்காக மிளகாய் அரைத்து வழிபாடு நடத்தினர். மதுரை செல்லத்தம்மன் கோயிலில் திரண்ட பாஜக மகளிர் அணியினர், அம்மியில் மிளகாய் இடித்து கண்ணகி அம்மனுக்கு பூசினர். அப்போது ரஷ்யாவை சேர்ந்த கேத்ரினா என்பவர், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இணைந்து மிளகாய் இடித்தார்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர், பெண்களுக்கு எதிராக எங்கும் குற்றங்கள் நடைபெறக் கூடாது எனவும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். எனவே, பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெறும் நீதிக்கான பேரணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியான குஷ்பு,  “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்ததுடன், பாஜக மகளிர் அணி பேரணியில், திமுக பெண்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மதுரையில் நீதி கேட்பு பேரணியில் ஈடுபட திட்டமிட்டிருந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள  எக்ஸ் தள பதிவில்,  “அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.

திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின்அவர்களே? திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.