டில்லி,
எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து  வரும் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா ஏற்கனவே பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது.
வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.
மேலும் நேற்று பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து  மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள் ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு (நீட்) நுழைவுத் தேர்வு நடத்து வது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
அதன்படி வரும் 2017-ம் ஆண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வால் இடஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீட் நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
பொதுவாக நீட் தேர்வுக்கான கேள்வியும் பாடத்திட்டமும் CBSE பாடத்திட்டத்தை சார்ந்தே இருக்கும் .ஆகவே மாநில பாடத்திட்டம் (சமச்சீர் கல்வி ) , மற்றும் மெட்ரிக்குலேசன் பாடத்தில் படித்த மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வை எதிர் கொண்டாலும்  நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக கடினம்.
ஆகவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் , மாநில அரசின் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தயார் செய்யபட்டால் மட்டுமே கிராமப்புற மாணவர்களும் மருத்துவ படிப்பை படிப்பதற்கு ஏதுவாக அமையும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை  நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.  தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் அதிகமான மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கியதும் ஜெயலலிதாதான்.
ஆனால் தற்போதைய புதிய அமைச்சரவை இதுகுறித்து என்ன முடிவு எடுக்க இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
 
மத்திய அரசு பாடத்திட்டத்தின்படி  நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டால்,  தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு, காணல் நீராகிவிடும் என்பதில் ஐயமேதுமில்லை.
தமிழக அரசு  இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமா?