டெல்லி: சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவரும் 110 மாணவர்களை தகுதிநீக்கம் செய்துள்ளதுடன், விசாரணை வளையத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளது.
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், ஜூன் 4ஆம் தேதி திடீரென தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகவும், கருணை மதிப்பெண் விவகாரம், ஒரே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
வினாத்தாள் கசிந்ததால் தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக மத்தியஅரசு அறிவித்து விட்டது. அதுபோல உச்சநீதிமன்றமும் நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து, நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இதையடுத்து, இளநிலை நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ தரப்பில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக, சிறப்புக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது. இதையடுத்து, பிகார் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். முன்னதாக, , நீட் வினாத்தாளை கசிய விட்ட விவகாரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த 6 பேரை கடந்த 21-ஆம் தேதி பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு முன்பாக, பாட்னாவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மாநில அரசு காவல்துறை அதிகாரிகள், பீகாரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு ஆவணங்களை வழங்கினர்.
இதனிடையே, இளநிலை நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்டமாக 110 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதிநீக்கம் செய்துள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் குஜராத் மாநிலத்தையும், 17 மாணவர்கள் பீகார் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.