டில்லி,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்கள் தேசவிரோதிகள் , ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.  மாணவர்களின் போராட்டம் உச்சகட்ட நிலையில் நடைபெற்று வரும் வேளையில், கிருஷ்ணசாமியின் இந்த அவதூறு பேச்சு மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  நீட் தேர்வு காரணமாக, மருத்துவம் படிக்க விரும்பிய  தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதன் காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அருகே உள்ள கிராமப்புற மாணவி தனது கனவு படிப்பான மருத்துவ படிப்பு நீட் தேர்வு காரணமாக பறிபோனதால் தற்கொலை செய்துகொண்டார்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. அவரது மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனுமா என்றெல்லாம் கேட்டு வருகிறார்.

மேலும்,  நீட்டுக்கு ஆதரவாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். மத்தியில் ஆளும் பாரதியஜனதாவுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் அவர் தொடர்ந்து பேசி வருவதால் தமிழகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென டில்லி சென்ற கிருஷ்ணசாமி, இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி மரணம் குறித்து சிபிஐ  விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போடுபவர்கள் தேச விரோதிகள் என்று அதிரடியாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தேசவிரோத சக்திகளும், ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்களும் தான் தமிழகத்தில் போராடு கிறார்கள் என்றும்,  பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இந்த காலத்துக்கு ஏற்கத்தக்கதல்ல என்றும் டில்லியில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழ்தேசியம் பேசுபவர்கள் நீட் பிரச்னையை அவர்கள் விருப்பத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

டாக்டர். கிருஷ்ணசாமியின் பேட்டி தமிழக மாணவர்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதங.