டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இரு அவைகளும் முற்பகல் 12மணி வரை எதிர்க்கட்சிகளில் முடங்கிய நிலையில், மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்ததால், அவையை சபாநாயகர் ஒம் பிர்லா ஜுலை 1ந்தேதி வரை ஒத்தி வைத்தார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 24ந்தேதி) துவங்கியது. தொடர்ந்து எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜூன் 27ந்தேதி) இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று முதல் இரு அவைகளும் தொடங்கின.
இன்றைய அமர்வில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி கள் அதை ஏற்க மறுத்து, மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், அதற்காக அவையின் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நீட் முறைகேடு தொடர்பான விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். ஆனால், இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.
மேலும் மாநிலங்களவையிலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரினார். ஆனால், அவைத் தலைவர் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையும் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவைக் கூடியவுடன், நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவையை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
மாநிலங்களவையிலும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் கூறுகையில், “இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவரே அவையின் மத்திய பகுதிக்கு வந்த அமளியில் ஈபட்ட நிகழ்வு, நாடாளுமன்றத்துக்கு கறைபடிந்த நாள். இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை நடந்ததில்லை. இதனால், நான் வேதனையடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் அவையின் மத்திக்கு வருவார், துணைத் தலைவர் அவையின் மத்திக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற செயல்களால், இந்திய நாடாளுமன்ற மரபுகள் சீரழிந்துவிடும் என வேதனை தெரிவித்தார்.