நெட்டிசன்:

நீட் தேர்வு குறித்து மூத்த பத்தரிகையாளர் “தராசு” ஷ்யாம் எழுதியுள்ள முகநூல் பதிவு

நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் (Primary legislation ) கிடையாது.

இந்திய மருத்துவ கவுன்சில் 2010-ல் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் (Regulations) படி வந்ததே நீட்.

மருத்துவ கவுன்சில் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. உ-ம் தேர்தல் கமிஷன்.

மருத்துவ கவுன்சில் தனது அதிகாரத்திற்குட்பட்டு இயற்றிய விதிகளால் திணிக்கப்பட்
டதே நீட்.

அதற்கான மருத்துவ கவுன்சில் பாடத்திட்டம் 2010-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது என்பது உண்மையே. என்றாலும் மருத்துவ கவுன்சில் நீட் விதிமுறைகளை அறிவித்த உடனேயே தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தடையாணை வாங்கி விட்டன.

ஒன்றல்ல, இரண்டல்ல 115 வழக்குகள் நீட் விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டன.

பிறகு 2013ல் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச்சட்டத்திற்கே விரோதமானது என்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.

அது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு. நீட் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று அது தீர்ப்பளித்து விட்டது.

இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளித்தார்.

பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீட் ரத்து தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்றபின் பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டது.

இதே போன்ற பிரச்னையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருந்தது.

எனவே இந்த சீராய்வு மனுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அந்த அரசமைப்புச்சட்ட அமர்விற்கு மாற்றப்பட்டது.

அது ஏப்ரல் 11, 2016-ல் மனுவினை அனுமதித்து 2013 தீர்ப்பினை திரும்ப பெற்று புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது

அந்த புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவேயில்லை. ஒரே வேளை புதிய அமர்வு திரும்பவும் விரிவாக விவாதித்து நீட் தேவையில்லை என்று தீர்ப்பளித்தால் இது வரை நிகழ்ந்த அநியாயங்க ளுக்கும் அனிதா உயிருக்கும் யார் பொறுப்பு?

ஏப்ரல் 11, 2016-ல் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட உடனேயே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்தவேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்தது.

உடனே ஏப்ரல் 28, 2016-ம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

எனவே, 2013-ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைப்புற வழியாக 2016-ஆம் ஆண்டு உயிர்பெற்றது.

பிரச்னை மத்திய பாடத்திட்டமா, மாநிலப் பாடத்திட்டமா என்பது கிடையாது.

இது இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம்.

காசிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு இல்லாதவர்களை தரம் தரம் என்று மட்டம் தட்டுவது என்ன நியாயம்?

நீட் தேர்வில் தகுதி மார்க் வாங்கித் தேர்ச்சி பெற்றிருந்தாலே ஒரு பணக்கார மாணவன் தனியார் மருத்துவ கல்லுரியில் காசு கட்டி மருத்துவராக முடியும்.

நீட்டில் பாஸ் அல்லது மினிமம் தகுதி மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். எதிர்கால மருத்துவர்.

மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து 199 வாங்குபவர்கள் தரமில்லாதவர்கள்.

இதெல்லாம் எவ்வளவு பெரிய அநியாயம்?