சென்னை:

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னைத்தவிர கொச்சியில் இருந்தும் ஒரு புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக மருத்துவர்களில் பல மாணவர்கள் இடம்பிடித்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ள நிலையில், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டு இடங்களை  நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப கவுன்சிலிங் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுமீதான கடந்த விசாரணையின்போது, உத்தரவிட்ட நீதிபதிகள்,  தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விதிமுறைப்படி எழுத்து தேர்வு எழுதி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனரா என்பதை சரிபார்க்க வேண்டியுள்ளது.  தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரின் பெருவிரல் ரேகை பதிவை சி.பி.சி.ஐ.டி.க்கு தேசிய தேர்வு முகமை அனுப்ப வேண்டும்.

மற்ற மாநிலங்களில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு முறைகேடுகள் வழியாக மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்தனரா; அதுகுறித்த புகார் ஏதும் வந்ததா என்பதை சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் நேற்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’சின் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் போத்திராஜ் ஆஜராகி ”16 மாணவர்கள் விரல் ரேகை வழங்கவில்லை. அவர்கள் 8ம் தேதிக்குள் வழங்குவர்” என்றார்.

இதையடுத்து வழக்கில் ஆஜரான  சி.பி.ஐ. வழக்கறிஞர்  ”நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையில் இருந்து இரண்டு புகார்களும், கொச்சியில் இருந்து ஒரு புகார் என  மூன்று புகார்கள் சிபிஐக்கு வந்துள்ளது, அதில், இரண்டு புகார்களை மருத்துவ கவுன்சில் மற்றும்  மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். கொச்சியில் இருந்து பெறப்பட்ட புகார் சி.பி.ஐ. ஆய்வில் உள்ளது” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன்  ஆஜனாரார். அவர், ”நீட் தேர்வில் முறைகேடு ஆள்மாறாட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் புகார் ஏதும் பெற்றதா என்பது குறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

அதேவேளையில் தனியார் கல்லூரிகள் தரப்பில்,  பெருவிரல் ரேகை அளிக்காத மாணவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ரேகை அளிப்பர் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி ”ஏழு மாணவர்கள் தவிர்த்து ஒப்படைக்கப்பட்ட என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்கள் மனுதாரரை விட குறைவான மதிப்பெண் பெற்றனர். இதில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குற்றம் சாட்டினார்.

பரபரப்பாக நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து,  இவ்வழக்கில் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலை பதிவாளரை சேர்த்து உத்தரவிட்டனர்.

அப்போது அரசு தரப்பில், தேர்வுக் குழு அனுப்பிய மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்வதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர், மருத்துவ மாணவர்களின் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘அடுத்த ஆண்டில் இருந்து மாணவர்கள் சேர்க்கையின் போது பெருவிரல் ரேகையை ஏன் பெறக் கூடாது’ என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை நவ., 21ந்தேதிக்கு  தள்ளி வைத்தனர்.