மதுரை:

நீட் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மதுரை கிளை,  “ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறக்கப்படுவதில்லை”  என்ற உண்மையை ஊரறிய எடுத்துரைத்தது. ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் திருப்பத்தூர் மாணவன்  முகமது இர்பான் தந்தை முகமது ஷபி ஜாமீன் மனுவையும்  தள்ளுபடி செய்தது.

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதி, கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பான் ஏற்கனவே ஜாமின்  பெற்றுள்ள நிலையில், நீட் தேர்வு முறைகேடுக்கு காரணமாக கருதப்படும், இர்பானன் தந்தை முகமது ஷபிக்கு  ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

விசாரணையின்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், ரூ. 5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம்பிடித்துள்ளனர் என்று அதிர்ச்சி தெரிவித்த நிலையில், ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை என்று உண்மையை உலகறியச் செய்தது.

இன்றைய விசாரணையின்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், மருத்துவப் படிப்பு அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வுப் பயிற்சிக்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீதிபதிகள் சாடினர்.

மேலும், 24 மணிநேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட மிகக் குறைவானது என்றும் தெரிவித்த நீதிபதிகள், புனிதமான பணியைச் செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களையும் திரும்பப் பெற்று வரும் மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் கைரேகைகள் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்றும் நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா எனவும் சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.