மதுரை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில், மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 1ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

மருத்துவக்கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் உதித்சூர்யா மீது  ஆள்மாறாட்டப் புகார் எழுந்தது. இது வெளியே தெரிந்த நிலையில், மருத்துவக்கல்லூரி மூலம் காவல்துறையில் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து தொடக்கத்தில் அந்த பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த முறைகேட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினர் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மாணவர் மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் குடும்பத்தோடு தலைமறை வாகி உள்ளனர்.

இந்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது,  சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு அதிகாரிகள் திருப்தியடைந்த பின்னரே கல்லூரியில் சேர்ந்ததாகவும் 20 வயதே ஆவதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு சிபிசிஐடி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில்,   நீட் தேர்வில் இது போல முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் அது எளிதாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல எனத் தெரிவித்த நீதிபதி,  வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உதித் சூர்யா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வயதை கருத்தில் கொண்டு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அரசுத் தரப்பில் வழக்குக்குத் தேவையான போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய நீதிபதி, மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அவ்வாறு ஆஜரானால் திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முன் ஜாமீன் வழக்கு ஜாமீன் வழக்காக மாற்றப்படும் என்று கூறிய நீதிபதி, மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராக தயாரா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாணவர் தரப்பில், விசாரணைக்கு ஆஜராக சம்மதம் தெரிவிக்காததால் முன்ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.