சென்னை: நீட் விலக்கு பெறுவது குறித்து அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் யோசனை தெரிவித்து உள்ளர். நீட் விவகாரத்தில் மசோதாவை விட உச்சநீதி மன்றத்தை நாடுவதுதான் சிறந்த தீர்வு, மற்றதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறியுளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2 முறை சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இது தமிழக அரசியல் கட்சிகள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திமுக அரசு பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவையும் ஆளுநர் ரவி திருப்பி உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்மும், நீட் விலக்கு மசோதாவை காட்டிலும் உச்ச நீதிமன்றம் மூலமே இதில் தீர்வு பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
“நீட் விலக்கு தேவை என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு. நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் சரி. இப்போதும் சரி. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால், உச்சநீதிமன்றம் செல்வதே சிறந்தது. நீட் விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் வழியாக மட்டுமே தீர்வு காண முடியும், மற்றதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்று நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கான காரணத்தைக் குடியரசுத் தலைவர் கூறவில்லை.
தற்போது திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானமும், நாங்கள் நிறைவேற்றிய அதே மசோதாவைத் தான், ஆனால், ஒரே வித்தியாசம் தான் இருந்தது. இவர்கள் குழு அமைத்திருந்தார்கள். அந்த குழுவின் பரிந்துரைப்படி சட்டங்கள் இயற்றப்பட்டதாகக் கூறிருந்தனர். மற்றபடி புதிய காரணங்களோ அல்லது புதிய சட்ட நுணுக்கங்களைச் சேர்த்து நீட் விலக்கு மசோதாவைத் தயாரிக்கப்படவில்லை.
ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் என்றால், அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார். அதை நாம் ஆராய்ந்து, அதை நிவர்த்தி செய்து, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆனால், இந்த விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு பெற வேண்டுமென்றால், மசோதாவை இயற்றுவதை விட உச்சநீதி மன்றத்தை நாடுவதுதான் சிறந்த தீர்வு, மற்றதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை. திமுக அரசு உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீட் விலக்கு பெறும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதாவை இயற்றியதும், நீட் விலக்கு பெறுவதாக கூறியதும் நாடகம் என்பதும், மக்களை ஏமாற்றும் செயல் என்ற உண்மை என்பது நிரூபணமாகி உள்ளது.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…