சென்னை: “இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்தியாவின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு (MBBS, BDS), கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு பராமரிப்பு (BVSc & AH), ஆயுர்வேதம், யூனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுதப்படை மருத்துவ சேவைகள், நர்சிங் படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ஒரே நுழைவு தேர்வாக நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்க நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு  தேதி ஏற்கனவே வெளியிடப்பட்டது.   அதன்படி,  நடப்பு கல்வியாண்டு முதல் பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Paramedical)  நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.  இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது. இதுவரை  இந்தியா முழுவதும் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா்  விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில்,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், வெளிநாடுகளான துபாய்,  அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது.

2026–27கல்வியாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்!

[youtube-feed feed=1]