டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு செப்டம்பரில் நடத்த மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு சில நாட்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் 1வது வகுப்பு முதல் பிளஸ்2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.  ஆனால், மத்தியஅரசு இதுவரை நீட் தேர்வு குறித்து உறுதியான தகவல் தெரிவிக்காததால், நீட் பயிற்சி பெறுவது குறித்து மாணாக்கர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதேபோல் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், மாணாக்கர்கள் இரண்டு முக்கவசம் அணிந்துகொண்டு தேர்வை எதிர்கொள்ள வைத்திருக்கலாமே என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனால், நீட் தேர்வை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த தேசிய தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.