சென்னை:

மிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் நீட் தேர்வு எழுத சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கல்வி படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு  மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எழுத விரும்பி பதிவு செய்துள்ள மாணவர்களில் சிலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு எழுதும் மையத்தை ஒதுக்கி சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

இது தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்றைய விசாரணையின்போது, சிபிஎஸ்இ கல்வி வாரியமும், தமிழக அரசும்  நாளையே பதில் அளிக்க வேண்டும் என் சென்னை உயர்நீதி மன்றம் கூறியது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ கல்வி வாரியம், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஆய்வு செய்த நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அதன்படி,  தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கிய சி.பி.எஸ்.இ உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும், அதுகுறித்த உத்தரவை சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடவும் செனனை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இது தமிழக மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.