நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நீட் தேர்வு மற்றும் கேள்வித் தாள் கசிவு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகின்றன. இன்று நாடாளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது.” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
நீட் உள்ளிட்ட தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை விவாதிக்க விரும்புவதாகவும், ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
“கேள்வித் தாள் கசிவு பிரச்சினை இரண்டு கோடி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது, இதுகுறித்து விவாதம் மூலம் மாணவர்களுக்குத் தகுந்த மரியாதையை வழங்குமாறு பிரதமரை நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
“நீட் தேர்வை பொறுத்த வரையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கேள்வித் தாள் கசிந்தது மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே.
இதனால் பல ஆண்டுகளாக அதற்காக படித்த மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டது கேள்வித் தாள் கசிவால் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்” என்று அவர் கூறினார்.
கடந்த 7 வருடங்களில் 70 க்கும் மேற்பட்ட முறை கேள்வித் தாள் கசிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.