டெல்லி: நாடு முழுவதும் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், கருணை மதிபெண் பெற்றவர்களின் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர்.  இளநிலை நீட் தேர்வுக்கு நீதிமன்றங்களின் அறிவுறுத்தலின்படி, பலருக்கு கருணை மதிபெண்கள் கொடுக்கப்பட்டது. மேலும் நீட் வினாத்தாள் கசிவானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ உள்பட பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து, 1 563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் 7 மையங்களில் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை, அதாவது 813 மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

அதன்படி, இதில் சண்டிகர் மையத்தில் 2 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை. ஏராளமான டாப்பர்கள் இடம்பெற்றதால் அதிகம் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்ட ஜஜ்ஜார் மையத்தில், 494 பேர் தேர்வு எழுத வேண்டி இருந்த நிலையில், 287 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சத்தீஸ்கரில் 291 தேர்வர்களும் குஜராத்தில் ஒருவரும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் கலந்துகொள்ளாத 48 சதவீத மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையே இறுதியாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி,  கருணை மதிப்பெண் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களது முடிவுகளை அறியலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.