சென்னை,
தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் தினசரி நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வழி கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 420 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 25ந்தேதி அதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டன.
இதையடுத்து முதற்கட்டமாக 100 மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் 13ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்த மையங்கள் மூலம் நீட் பயிற்சி பெற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை நீட் தேர்வு மையம் செயல்படாத நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத் தேர்வு முடிந்ததும், மார்ச் முதல் மாணவர்களுக்கு தினந்தோறும் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சிக்க 2000 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கத்திட்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இனிமேல், தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும், :பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களை நியமிக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.