டில்லி,

நீட் 85 சதவிகித உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து மேல்முறையீடு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில்  தமிழகத்திற்கு நீதி கிடைக்குமா? என தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

மாநில கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழக மாணவர்கள் நிம்மதியாக இருந்த நிலையில், சிபிஎஸ்டி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.

ஏற்கனவே  நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்ததுடன், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நேற்று திட்ட வட்டமாக தெரிவித்து உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த மனுவில் என்ன உத்தரவு நீதிமன்றம் பிறப்பிக்கும் என தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.