டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரு சில தினங்களாக அதிகரித்துள்ளது. இந் நிலையில் பிரதமர் மோடி, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

காணொளி காட்சி மூலமாக அவர் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதல்வர் பழனிசாமிக்கு பதில் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் கலந்து கொண்டார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபெஷ் பாகெல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அசாம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றதால், அவருக்கு பதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா வேகமாக பரவி வருவதால் நகரங்களை போன்று சிறு நகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.

தடுப்பு மருந்துகள் வீணாவதை நாம் தடுக்க வேண்டும். இதற்காக சரியாக திட்டமிடுவதுடன், அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டாலும் கவனமாக இருக்க வேண்டும்.

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க வேண்டும். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று பேசினார்.