டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந் நிலையில், பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களும் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தீவிர கவனம் செலுத்துதல், சோதனை மற்றும் தனிமைப்படுத்துவதல் ஆகிய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பான பரிந்துரைகள் இருந்தாலும் அதை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.