நியூயார்க்:
மசூத் அஜாருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவனை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அஜாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
அதைத் தொடர்ந்து மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன.
ஆனால், போதுமான ஆதாரம் இல்லை என கூறி, இந்த தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று கூறி கடைசி நேரத்தில் சீனா தடுத்து விட்டது.
இதன் காரணமாக அந்த தீர்மானத்தை 9 மாதங்கள் வரை கிடப்பில் போட முடியும். மசூத் அஜார் விவகாரத்தில் 4 வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அஜாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா கூறியது. பிராந்திய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்தது.
மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பதை ஏற்க முடியாது என அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மேன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சீனா இப்படி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தால் பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள், வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் எதிர்ப்பை மீறி மசூத் அஜாருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உறுப்பு நாடுகள் யோசிக்கும் எனவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.