டில்லி:

சமூக வலை தளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2019 தேர்தலில் தலையிடும் நோக்கத்தோடு இந்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ள நிலையில் பேஸ் புக் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்று பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பாஜக தலைவர்கள், பிரதமர் மோடியை போல் எனக்கு தனிப்பட்ட முறையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு கிடையாது. சமூக வலை தளம் ஒரு பயனுள்ள ஆயுதம். அதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் வரையறை மற்றும் பக்க விளைவுகளை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

சமூக வலை தளத்தில் உள்ள பின்னடைவு குறித்து மோகன் பகத் கூறுகையில், ‘‘சமூக வலை தளத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் கருத்து தெரிவிக்க வேண்டியிருக்கும். பலரது கருத்தை அறியும் முன்னரே எனது கருத்தை பதிய வேண்டியிருக்கும். சமயங்களில் இந்த கருத்து தவறாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நம்மை சேர்ந்தவர்கள் கூட அவ்வாறு புரிந்து கொள்ள நேரிடும். பின்னர் அந்த பதிவை அழிக்க நேரிடும்.

அரசியல் களத்தில் பணியாற்றுபவர்களுக்கு இதன் மூலம் நல்ல மதிப்பு கிடைக்கும். எனினும் அவர்களும் இதை எச்சரிக்கையுடன் தான் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தின் அடிமையாக நாம் மாறிவிடக் கூடாது. அளவோடு இதை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

சமூக வலை தளங்களில் கவனம் செலுத்துமாறு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு சந்தர்பங்களில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் மோகன் பகத் சமூக வலை தளத்தில் உள்ள அபாயங்கள் குறித்து எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.