புதுக்கோட்டை:

ருகில் பள்ளி இருப்பதால் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தற்காலிகமாக போராட்டத்தை  ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை வளம் முற்றிலுமாக பாதிக்கப்படும், குறிப்பாக நிலத்தடி நீர் முழுதும் உறிஞ்சப்பட்டு விவசாயம் பாதிக்கும். குடிநீருக்கும் கிடைக்காத சூழல் ஏற்படும். ஆகவே இத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதியில் கடந்த 22 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள்.

விஜயபாஸ்கர்

இடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அப்போது இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தும் அதை ஏற்காமல் போராட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில், இன்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நெடுவாசல் சென்று போராட்டக்காரர்களை சந்தித்தார். அப்போது அவர், “இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், தமிழக அரசுின் சுற்றுப்புறசூழல் துறை அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் அந்த அனுமதியை தமிழக அரசு அளிக்காது. ஆகவே இத்திட்டம் செயல்படுத்தப்படாது. தவிர போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே பள்ளி இருக்கிறது. போராட்டத்தால் தேர்வ காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பிறகு, “அமைச்சர் அளித்த உறுதி மொழியாலும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதாலும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்படுகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்தால், இதைவிட பல மடங்கு வீரியமாக போராட்டம் நடத்தப்படும்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.