“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும் பரிந்துரைத்திருக்கிறார்கள்” — இதைப் பார்க்கும் போது, இதெல்லாம் ஒரு சட்டப் புத்தகம் பற்றிய மதிப்புரைகள் போலத் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் இது… வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டைக்கு (Lawyer neckband) வழங்கப்பட்டுள்ள “மதிப்புரைகள்”!

புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அங்கூர் ஜஹாகிர்தார் இதைத் தனது LinkedIn பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

Lawkart.in என்ற இ-காம் தளத்தில் விற்கப்படும் “வக்கீல் கழுத்துப்பட்டைகளின்” மதிப்புரைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் சுலபமாக ₹20க்கு கிடைக்கும் அதே வகை கழுத்துப்பட்டை, வலைத்தளத்தில் ₹1,799 என்று விலையிடப்பட்டு சலுகை விலையாக ₹499க்கு விற்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமானது என்னவென்றால் அதன் விலையை விட அதற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்புரைகள் தான்.

மதிப்புரை எழுதியவர்களில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், யு.யு.லலித், எஸ்.ஏ.பாப்டே, மற்றும் பல மூத்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பட்டியல் நீண்டு செல்கிறது.

மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த மதிப்புரைகளில் சில நம்பமுடியாதவையாக இருந்தது.

“ஸ்டார் ரேட்டட் வடிவமைப்புடன் கூடிய இந்த வக்கீல் கழுத்துப்பட்டை முற்றிலும் நேர்த்தியானது! நீதிமன்ற ஆடை தரநிலைக்கு ஏற்றது.” என்று “நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்” பெயரில் பதிவிடப்பட்டுள்ளது.

“சூர்யா காந்த்” என்ற பெயரில் “துணி சற்று மெல்லியதாக இருக்கலாம், ஆனால் நீதிமன்றத்தில் தொழில்முறை தோற்றம் தருகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உச்சமாக சமீபத்தில் பதிவிடப்பட்ட இந்த பதிவுகளில் ஏற்கனவே மறைந்த சட்ட வல்லுநர்களான ஃபாலி நாரிமன், சோலி சோராப்ஜி, ராம் ஜெத்மலானி ஆகியோரின் பெயரிலும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் பெயர்களைப் பயன்படுத்தி போலியான மதிப்புரைகள் வெளியிடப்பட்டதைப் பார்த்த பலரும், “மகாத்மா காந்தியின் பெயரில் மதிப்புரை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று வழக்கறிஞர் அங்கூர் ஜஹாகிர்தாரின் பதிவுக்கு பதிலளித்துள்ளனர்.