டெல்லி: இதுவரை 19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கின. நேற்று வரை நாடு முழுவதும் 16,15,504 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று மாலை 7.10 மணிவரை நிலவரப்படி 3,34,679 ;பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று ஒரே நாளில் (மாலை 7.10 மணி நிலவரப்படி) 3,34,679 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 19,50,183 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 348 பேர் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. நாட்டில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,30,119 பேருக்கும், ஒடிசாவில் 1,77,090 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.