டெல்லி: கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இது 8% சதவீதமாக இருந்தது.
நாடு முழுவதும் 13500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருந்தாலும், அதில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை ஆறுதல் தருவதாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை அரசு வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரங்களின் படி, கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 1748 ஆக இருந்தது. இது நாட்டின் மொத்த 13387 கொரோனா வைரஸ் வழக்குகளில் கிட்டத்தட்ட 13% ஆகும்.
கடந்த சனிக்கிழமையன்று, நாட்டில் மொத்தம் 7,447 கொரோனா வைரஸ் நோயாளிகளில் 642 பேர் மீண்டதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை சதவீதம் அடிப்படையில் 8% ஆகும். ஒரு வாரம் கழித்து, அதன் சதவீதம் 8ல் இருந்த 13% வரை உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் மகாராஷ்டிராவில் காணப்படுகின்றன. இதுதான் நாட்டில் அதிகபட்ச கொரோனா தொற்று கொண்ட மாநிலமாகும். 3000 க்கும் மேற்பட்டவர்களில் 300 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமான 2வது மாநிலம் கேரளாவாகும். இங்கு 245 பேர் குணமாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.