டெல்லி:
என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம்.
2016 ஜனவரி மாதம் 2 ஆம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம், பதான்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனல், அந்த விமானப் படை தளத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் மற்றும் அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக தகவலை வெளியிட்டது.
இந்த ஒளிபரப்பு பயங்கரவாதிகளுக்குக் நமது ராணுவ தகவல்களை காட்டிக் கொடுக்கும் வகையில் அது அமைந்துவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து என்டிடிவி இந்தியாவின் இந்தி மொழி அலைவரிசையின் ஒளிபரப்புக்கு, 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
நவம்பர் 9ந்தேதி என்டிடிவி இந்தி சேனல் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்த தடை உத்தரவு இந்தியா முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்டிடிவி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு உடனே விசாரணைக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்திய அளவில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் ஒளிபரப்பு முடக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.