புதுடெல்லி:

தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பும் முன் அவர்களிடம் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பகுதிவாரியாக அவர்கள் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களில் கட்டண அடிப்படையில் அழைத்துவரப்படுவார்கள். மத்திய சுகாதாரம் மற்றும் விமான போக்குவரத்துத் துறைகள் வழங்கும் சுகாதார நெறிமுறைகளை பயணத்தின்போது அவர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா வந்தவுடன் ஒவ்வொருவரும் ஆரோக்ய சேது செயலியில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா அழைத்துவரப்பட்ட பிறகும், அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் அவர்கள் மருத்துவமனைகளிலோ, முகாம்களிலோ 14 நாள்கள் கட்டண அடிப்படையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 நாள்களுக்குப் பிறகு அவர்களிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சுகாதார நெறிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதுதொடர்பான விரிவான தகவலை மத்திய வெளியுறவு மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளின் அமைச்சகங்கள் தங்கள் வலைதளங்களில் தெரிவிக்கும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவது தொடர்பான நெறிமுறைகளை மத்திய அரசு தயாரித்துள்ள நிலையில், அவ்வாறு தாயகம் திரும்பும் இந்தியர்களின் பட்டியலை அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தயாரித்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.