டில்லி
தேசிய ஜனநாயக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பல அதிருப்தி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் சிறிய கட்சிகள் பாஜகவுடன் இணைந்து நடந்து வருகின்றன. ஆனால் அந்தக் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் பல அதிருப்தி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. முக்கியமாக தற்போதைய பாஜக அமைச்சரவையில் பல கூட்டணி கட்சிகளுக்கு அதிக பதவிகள் அளிக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறாததது குறித்து சிவசேனா அதிகம் கவலை தெரிவிக்கவில்லை ஆனால் சிவசேனா கட்சி நடைபெற உள்ள மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சமமாக தொகுதிகளை பெற்று முதல் அமைச்சர் பதவிக் காலத்தை சமமாக பங்கிட கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாஜக தலைவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறாதது குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் நேரடியாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு சமமாக பல தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் பெற்றது. அடுத்து வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்பும் ஐக்கிய ஜனதா தளம் தனது கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு சொற்ப இடங்களே அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 17 ஆம் மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. பாஜக அரசு கொண்டு வர உள்ள பல கொள்கை முடிவுகளுக்கு ஐ ஜ த ஒப்புதல் அளிக்காது என கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் தடை சட்டம், பொதுச் சிவில் சட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிக்கவில்லை. அத்துடன் அனைத்து மத மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என கூறி உள்ளார். இது பொதுச் சிவில் சட்டத்துக்கும் பொருந்தும் என்பதால் இதை அவர் எதிர்க்கலாம் என சொல்லப்படுகிறது.
இதைத் தவிர காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய எண்ணி உள்ளது. இந்த சட்ட ரத்துக்கும் ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.