புதுடெல்லி:

மறைந்த முன்னாள் உ.பி. முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி, முகத்தில் தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.


செவ்வாய்க் கிழமை மதியம் ரோஹித் மூக்கில் ரத்தம் வழிய கிடந்தார். அதன் பிறகு  அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது  இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது.

 

குற்றப்பிரிவு போலீஸார் ரோஹித் திவாரி இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினரை விசாரித்தனர். ரோஹித்தின் மனைவி அபூர்வா தற்போது டெல்லியில் இல்லை. தடயவியல் நிபுணர்களும் ரோஹித் வீட்டை ஆய்வு செய்தனர்.

ரோஹித் வீட்டில் 7 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் 2 வேலை செய்யவில்லை. ஏப்ரல் 12ம் தேதி ரோஹித் திவாரி உத்தராகண்ட் சென்று வாக்களித்து விட்டு ஏப்ரல் 15ம் தேதி டெல்லி திரும்பியுள்ளார்.

அவர் மது போதையில் சுவற்றைக் கைதாங்கலாகப் பிடித்து நடந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுநாள் ரோஹித் மூக்கில் ரத்தம் வழிய மயக்கமானதாக ரோஹித்தின் தாயார் உஜ்வாலா திவாரிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸுடன் வீட்டுக்கு வந்து ரோஹித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

தொலைபேசி அழைப்பு தாயாருக்கு வந்த போது வீட்டில் ரோஹித் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், பணியாளர்கள் வீட்டில்தான் இருந்துள்ளனர் என்று டெல்லி போலீஸார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இயற்கை மரணம் அல்ல என்றும், மூச்சுத் திணறலால் ரோஹித் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டதையடுத்து, இது கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ரோஹித், என்.டி.திவாரியின் மகன் என்பது 2014-க்கு பிறகுதான் தெரிந்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் ரோஹித்தை மகன் என்று என்.டி.திவாரி ஏற்றுக் கொண்டார்.

அதன்பின்னர் தான் அதே ஆண்டில் ரோஹித்தின் தாயார் உஜ்வாலாவை என்.டி. திவாரி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.