மும்பை
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேசியவாத காங்கிராச் தலைவர் அஜித் பவார் மாநிலத்தில் அரசு அமைக்க தம்மை அணுகியதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயன்றது. ஆனால் மகாராஷ்டிர ஆளுநர் பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆயினும் அஜித் பவாரின் ராஜினாமாவால் இந்த அரசு 80 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. வெறும் 80 மணி நேரமே நீடித்த அரசை அமைத்தது குறித்து தேவேந்திர பட்நாவிஸ் ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், “மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தாமாகவே என்னை அணுகினார். இந்த அரசுக்கு 54 தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்த அவர் என்னை ஒரு சில உறுப்பினர்களுடன் பேச வைத்தார். அத்துடன் சரத்பவாரிடம் இது குறித்து தாம் ஏற்கனவே பேசி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படத் தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை எனக் கூறினார். அது மட்டுமின்றி மூன்று கட்சிக்கூட்டணியில் குறிப்பாக சிவசேனாவுடன் இணைவது சரியாக அமையாது எனவும் நிலையான ஆட்சி அமைக்க பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அதை நம்பி ஆட்சி அமைத்தது எங்களையே திருப்பித் தாக்கும் ஆயுதமாக அமைந்தது. அவருடைய அரசியல் நாடகத்தை நான் பிறகு தான் புரிந்துக் கொண்டேன். எங்களால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த நான் நவம்பர் 26 ஆம் தேதி ராஜினாமா செய்தேன். இதன் மூலம் மகாராஷ்டிர விகாஸ் அகாதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
அஜித் பவார் நீர்ப்பாசன வழக்கில் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் 26 ஆம் தேதி ராஜினாமா செய்தேன் இந்த அறிவிப்பு 27 ஆம் தேதி வெளியானது. தவிர இந்த அறிவிப்பு நிச்சயம் உயர்நீதிமன்றத்தில் செல்லுபடி ஆகாது” எனக் கூறி உள்ளார்.