டில்லி

ருமான வரித்துறை தற்போது தங்களின் ஓய்வூதியத்தை  வைப்பு நிதியில் டிபாசிட் செய்து வட்டி பெறும் முதியோர்களின் மேல் தன் பார்வையை திருப்பி உள்ளது.

ஓய்வு பெற்ற முதியோர்கள் தங்களின் பி எஃப் மற்றும் ஓய்வூதியத்தை வங்கியில் வைப்பு நிதியில் டிபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டியில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.   இது போன்ற வருமானங்களுக்கு வரி கட்டவோ அல்லது அதை வரிக்கணக்கில் காட்டவோ தேவை இல்லை என்பது வருமான வரி விதிகளில் ஒன்று.

தற்போது வருமானவரித்துறை இது போன்ற வைப்பு நிதிகளின் வருடாந்திர வட்டித்தொகை ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக வாங்குபவர்களும் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என ஒரு விதியை புகுத்த உத்தேசித்துள்ளது.    அது மட்டுமின்றி மருத்துவர்கள், ஆடிட்டர் போன்ற தொழில் முனைவோர் பலரும், ரொக்கமாக தங்களின் கட்டணத்தை வசூலிப்பதால் அனைத்து வருமானங்களுக்கும் கணக்கு அளிக்கவும் உத்தரவிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர், “எங்களின் நோக்கம் அதிக அளவில் வட்டி வாங்கி வரி செலுத்தாத மக்களிடம் சரியான வரி வசூலிப்பதே.  சிறிய அளவில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக வங்கி வட்டியை பயன்படுத்துவோரை நாங்கள் விரட்டி பிடிக்கவில்லை” எனக் கூறினார்.

வங்கிகளில் வட்டி வழங்கும் போதே டி டி எஸ் எனப்படும் வருமான வரியை கழித்து விட்டு பாக்கி உள்ள தொகைகளை மட்டுமே வழங்குகிறார்கள்.   அதாவது வட்டியில் 10% தொகை வரியாக பிடிக்கப்பட்டு வருமான வரித்துறைக்கு செலுத்தப்படுகிறது.  ஆனால் வருமான வரித்துறையினர் அதிக அளவில் வட்டித் தொகையைப் பெற்று விட்டு வெறும் 10% மட்டுமே பலர் இவ்வகையில் வரியாக செலுத்துகின்றனர் என கூறுகின்றனர்.   மேலும் வங்கிகளிடம் இருந்து விரைவில் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை எவ்வளவு எனவும், அதற்காக எத்தனை ரூபாய் வட்டி வழங்கப்பட்டதென்றும்,  வருமானவரித்துறை கேட்டறிய உள்ளது.