மும்பையில் அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார்.
சொகுசு கப்பலில் நடந்த கலை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை மருந்து விநியோகிக்கப்பட்டதாகவும் ஆர்யான் கான் அதை பயன்படுத்தியதாகவும் கூறி அவரைக் கைது செய்தார், அதனைத் தொடர்ந்து சமீர் வான்கடே இந்தியா முழுவதும் பிரபலமானார்.

ஆர்யான் கான் மீதான இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சமீர் வான்கடேவிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை வேறு அதிகாரிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், நவி மும்பையில் உள்ள வாசி பகுதியில் சமீர் வான்கடே உணவுவிடுதியுடன் கூடிய பார் ஒன்றை நடத்தி வருவதாக வெளியான செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் சத்குரு என்ற பெயரில் இயங்கிவரும் இந்த பார் குறித்த விவரம் வெளியில் தெரிந்த உடன், இது தனக்கு சொந்தமான பார் தான் என்றும் முறையான லைசென்ஸ் பெற்றே தான் இந்த பாரை நடத்திவருவதாகவும் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.
27 அக்டோபர் 1997 ல் தன் பெயரில் உரிமம் பெற்று தனது தாயார் இந்த கடையை நடத்தி வந்ததாக கூறியிருக்கும் இவர், தனது தாயார் மறைவுக்குப் பின் தனது தந்தை இதை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
2006 ம் ஆண்டு மத்திய அரசுப்பணியில் சேர்ந்த போதே பாருடன் கூடிய உணவகத்தை நடத்தி வருவதை தெரிவித்திருந்ததாகக் கூறிய அவர். அதற்குண்டான வருமானத்தையும் தனது வருமான வரி கணக்கில் தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு அதிகாரி ஒருவர், “மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் இரு வேறு இடங்களில் இருந்து வருமானம் ஈட்ட விதிகளில் இடமில்லை, பரம்பரை தொழிலாக இருப்பினும் மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையில் முறையான அனுமதி பெற்றிருப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
பார் நடத்துவதற்கான உரிமம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள சமீர் வான்கடே மீது மத்திய அரசு ஊழியராக முறையான ஒப்புதல் பெறாமல் பார் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1979 ம் ஆண்டு பிறந்த சமீர் வான்கடே பெயரில் உரிமம் வாங்கியபோது அவருக்கு வயது 18 என்பதும் அப்போது அவரது தந்தை தியான்தேவ் மாநில காலால் துறை ஆய்வாளராக பணியாற்றினார் என்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
விதிகளின் படி 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பார் நடத்த உரிமம் வழங்கமுடியும் என்ற நிலையில் 18 வயதே ஆன சமீர் வான்கடே லைசென்ஸ் வாங்கியது எப்படி என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.