சென்னை: விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் முடிந்து 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சை யான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங் களில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அவர்கள் டிவிட் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதையடுத்து நயன்தாரா குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 38வயதாகும் நயன்தாரா, தன்னைவிட வயது குறைந்த விக்னேஷ் சிவனை திருமணம் முடித்துள்ள நிலையில், அவருக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லையா? அல்லது அவர் மூன்றாம் பாலினத்தவரா (திருநங்கை) என விமர்சிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், வாடகை தாய் சட்டப்படி, திருமணம் முடிந்த  4 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியாது. அதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை  என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  “விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்து, விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த விசாரணை குழுவினர்,  முதற்கட்டமாககுழந்தை பிறந்த  மருத்துவமனையை விசாரிக்கவும், தேவைப்பட்டால் விக்னேஷ், நயன்தாரா தம்பதியிடம் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.