இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
டோஷாகானா நிறுவனத்திடமிருந்து, விலையுயர்ந்த சொகுசு கார்களை, அவற்றின் மொத்த விலையில் வெறும் 15% மட்டுமே செலுத்திப் பெற்று ஊழல் புரிந்ததாக, நவாஸ் மற்றும் ஆசிப் அலி சர்தாரி, யூசுப் ராசா கிலானி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப் மீதான வழக்கை தனியாக பிரித்தெடுத்த நீதிபதி, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, நவாஸ் ஷெரீப்பை பிரகடனப்படுத்திய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் வேண்டுமென்றே சட்டத்தின் செயல்பாட்டில் இருந்து தன்னை தவிர்த்துக் கொள்வது, தப்பி ஓடுவது, மறைப்பது என்பதாக நடந்து கொண்டிருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்” என்றார்.