டில்லி

ந்திய கடற்படையின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட கரம்பீர் சிங் தனது முதல் உரையில் முக்கிய பிரமுகர் கலாசாரத்தை கடுமையாக தாக்கி உள்ளார்.

இந்திய கடற்படையில் பெரிய அதிகார்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் கலாசாரம் உள்ளது. அவர்களுக்கு என பல வசதிகள் அளிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி அவர்களுக்காக சிறப்பு உணவுகள் மற்றும் பானங்கள் பரிமாறப் படுகின்றன. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பலவித சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இ

ந்நிலையில் நேற்று முன் தினம் கப்பற்படை தலைவராக கரம்பீர் சிங் பதவி ஏற்றார். அன்றைய நிகழ்வில் அவர் அனைவருடனும் சமமாக அமர்ந்தது, உரையாடியது உள்ளிட்டவைகள் பலருக்கும் அதிசயத்தை அளித்தது. அவர் நேற்று கப்பற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “கப்பற்படை அதிகாரிகளில் பலருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது. அது பதவிக்கு ஏற்றபடி மாறுகின்றது. அது மட்டுமின்றி இவ்வாறு சிறப்பு அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்களின் பதவிக்கு ஏற்ப உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. எனவே அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள் போன்றவை வழங்குவதன் மூலம் செலவை கணிசமாக குறைக்க முடியும்.

முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பல உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை வீரர்களாக உள்ள்னர். அவர்களில் பலர் ஒவ்வொரு அறைக்கும் காவலர்களாக நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறு உதவியாளர்கள் நியமிக்கப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முக்கிய பிரமுகர்கள் போர்க்கப்பல்களில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ளும் போது தேவையற்ற பல ஆடம்பர செலவுகள் செய்யப்படுகின்றன. அவர்கள் மீது மலர் தூவுதல், மாலை அணிவித்தல், சிவப்பு கம்பளம் விரித்தல், குத்து விளக்கு ஏற்றுதல் போன்ற்வற்றை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி தலைவர்களின் நிகழ்வுகளால் தினசரி வேலைகள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.