நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்.
இதைத்தவிர்த்து இரண்டாவதாகவும் ஓர் நவபாஷாண சிலை கண்டறியப்பட்டது. அது கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலாகும்.
இதனையெல்லாம் கடந்து உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவபாஷாண பெருமாள் சிலை எங்கே உள்ளது எனத் தெரியுமா?
நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோவிலில் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாள் உள்ளார்.
28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க வேண்டியதெல்லாம் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் நீங்குவதும் இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.
கரை ஒதுங்கிய பெருமாள்
சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இருந்த சித்தர்கள் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைச் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.  மலையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், இந்த சிலை நீரில் அடித்துவரப்பட்டு காரிசேரியில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை மீட்ட மக்கள், அந்த இடத்திலேயே நவபாஷாணத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைச் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டியுள்ளனர்.
திருவிழா
பெருமாளுக்கு உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியன்று பிற பகுதிகளில் நடைபெறுவதைப் போலவே இங்கும் பெரிய அளவில் திருவிழா நடத்தப்படுகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பைக் காணப் பல ஆயிரம் பேர் இங்கு கூடுவது வழக்கம்.
வழிபாடு
நம்மவர்கள் சிலர் விரதம் இருப்பது என்றால் ஒரு வாரம் அல்லது ஒரு மண்டலம் என இருப்பார்கள்.
ஆனால், இந்த லட்சுமி நாராயணரை வேண்டி விரதம் இருப்போர் மார்கழி மாதத்தில் திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு 28 நாட்கள் விரதம் இருந்து பின் லட்சுமி நாராயணரை வணங்குகின்றனர்
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி நீரால் அர்ச்சனை செய்கின்றனர்.
இந்த தீர்த்த நீரைக் குழந்தையின்றி தவிக்கும் தம்பதியர் அருந்தி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  அவ்வாறு மகப்பேறு அடைந்தவுடன் மீண்டும் மூலவருக்குத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
தல சிறப்பு
இங்கு மூலவராக வீற்றிருக்கும் பெருமாளின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு.
இக்கோவில் மிகச் சிறிய கோவிலாக இருந்தாலும் நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்ட பெருமாள் சிலை உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயமாகும்.
சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
எப்படிச் செல்லலாம்?
சென்னையில் இருந்து சிவகாசி 540 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு, திண்டிவனம், திருச்சி, மதுரை வழியாகச் சிவகாசியை வந்தடையலாம்.  செங்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகள் சென்னையில் இருந்து சிவகாசி செல்கிறது.